தேசிய நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மன்னாரில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்வதற்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் இன்று (22) காலை ஆரம்பமானது, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ,மாவட்டச் செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் நிகழ்த்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் நிகழ்வினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றது.
அனுமதி வழங்கப்படாமல்
இராஜாங்க அமைச்சரான காதர் மஸ்தானின் தலைமையில் முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மற்றும் முசலியில் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
ஆனால், காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (22) காலை 9.30 மணியளவில் இராஜாங்க அமைச்சரான காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ளச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரு மதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமை தவறான விடயம் என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான இராஜாங்க அமைச்சரான காதர் மஸ்தானின் செயற்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தவிரவும், காதர் மஸ்தான் தனது கட்சி சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இதனை ஒரு அரசியல் நிகழ்வு போல நடத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.