;
Athirady Tamil News

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம்: ஏற்பாடுகள் குறித்து ஐ.நாவிடம் ஜீவன் தொண்டமான் விளக்கம்

0

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள ‘பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்’ என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தை
சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள உலக வானிலை அமைப்பின் தலைமையகத்தில் (WMO) நடைபெற்ற இச்சந்திப்பில் ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உப தலைவர் யோகானஸ் கல்மன், உலகளாவிய கண்காணிப்பு பணிப்பாளர் வில் ரைட்எட், தலைமை நிபுணத்துவ அதிகாரி கலாஸ் மொல்டிவ்ஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்ரமசிங்க ஆகியோர் அமைச்சருடன் சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது குடிநீர் வழங்குதலில் ஏற்படவுள்ள கொள்கை ரீதியிலான மாற்றம், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை என்பன குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது விளக்கம் அளித்தார்.

செயல் திட்டம் பற்றியு விளக்கம்
அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டம் பற்றியும் விளக்கம் அளித்தார். குறிப்பாக ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை ஊடாக, குடிநீர் தொடர்பான அனைத்து ஸ்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களை ஒன்றிணைத்து பிரதம அமைச்சரின் கீழ் தனியான செயலகமாக நீர்வழங்கல் கொண்டுவரப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள், அந்த செயலகம் எவ்வாறு செயற்படும் என்பது சம்பந்தமாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதேவேளை, “நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்துக்குள் பாதுகாப்பு மற்றும் தூய்மையான குடிநீர் என்பதும் பிரதான விடயமாக உள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை அடைவதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட எதிர்பாராத சூழ்நிலைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் இலக்கை அடைவது சவாலாக உள்ளது. எனவே, உரிய காலப்பகுதிக்குள் இலக்கை அடைவதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட வசதிகளை ஐ.நாவின் குடிநீருக்கான திட்டத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம் எனவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.