இலங்கை வரவிருக்கும் சீன ஆராய்ச்சி கப்பல் தொடர்பில் நிலையில்லா தன்மை
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விடயம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு சென்று சந்திப்புக்களை நடத்திய பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பிலும் இந்த கப்பல் பயணம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக இந்த விடயம் தொடர்பாக, சீன வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
சீன தரப்பின் மறுப்பு
எனினும் நவம்பர் 25 ஆம் திகதிக்கு பிறகு பரிசீலிக்க முடியும் என இலங்கை தெரிவித்திருந்தது.
இதனை ஏற்றுக்கொள்ளாத சீன தரப்பு, அடுத்த வாரம் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி கோரியது.
இதன்போது கப்பல், இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து, எரிபொருளை நிரப்பி விட்டு வெளியேற முடியும் இலங்கை சமரசம் செய்ய முன்வந்தது. எனினும் சீன தரப்பு, இந்த சமரசத்தை மறுத்துவிட்டது.
இதனால் சீன கப்பல் விவகாரம் தீர்க்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.