அடுத்த கட்ட யுத்த நடவடிக்கையில் இஸ்ரேல்
காசா மீதான வான் வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ள இஸ்ரேல், வடக்கில் மீதமாக இருக்கும் மக்களை தெற்கு நோக்கி இடம்பெயருமாறு கட்டளையிட்டுள்ளது.
யுத்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில் தமது தரப்பு இழப்புக்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
4 ஆயிரத்து 700 ற்கும் மேற்பட்டவர்கள் பலி
இஸ்ரேல் மீதான ஹமாஸ் போராளிகளின் திடீர் தாக்குதலை அடுத்து கடந்த 16 நாட்களாக காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை 4 ஆயிரத்து 700 ற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் லெபானின் ஹிஸ்புல்லா இயக்கமும் இரண்டாவது முனையாக யுத்தத்தில் இணையுமாயின் அது பாரிய அழிவை ஏற்படுத்தும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு எச்சரித்துள்ளார்.
பதில் தாக்குதல்கள்
ஹிஸ்புல்லா இயக்கமும் தமக்கு எதிராக போர் தொடுக்குமாயின், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பதில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெபானின் எல்லையிலுள்ள இஸ்ரேலிய கட்டளைத் தளபதிகளுடனான சந்திப்பில் வைத்து இஸ்ரேல் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
காசாவிற்குள் பிரவேசிக்க ஹிஸ்புல்லா இயக்கம் தீர்மானிக்குமா என்பதை தற்போது கூற முடியாது என்ற போதிலும் அவ்வாறு பிரவேசித்தால் அது வாழ்வா சாவா என்பதாகவே இருக்கும் என பெஞ்ஜமின் நெட்டன்யாஹு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மூலம் பலஸ்தீனியர்களுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து வருவதாக தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், காசாவில் பொதுமக்கள் மீது குண்டுவீச்சு தொடர்ந்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.