ரணில் விக்ரமசிங்க செய்தது தவறு : சிறிலங்கா பொதுஜன பெரமுன பகிரங்க குற்றச்சாட்டு
சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் தவறானதென சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹேலிய ரம்புக்வெல்ல மாற்றப்பட்டமை நியாயமற்றதென கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றங்கள்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டிருந்தார்.
இதன்படி, சிறிலங்கா சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுகாதார அமைச்சராக வைத்தியர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் தவறானதென பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல மீதான போலி குற்றச்சாட்டு
சிறிலங்காவின் சுகாதார அமைச்சராக பணியாற்றிய கெஹலிய ரம்புக்வெல்ல மீது கடந்த நாட்களில் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததை சாகர காரியவசம் இன்றைய ஊடக சந்திப்பின் போது நினைவூட்டியுள்ளார்.
அத்துடன், அவை ஆதரமற்ற பொய்கள் என்பது நிரூபனமாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ரமேஷ் பத்திரனவை சிறிலங்காவின் சுகாதார அமைச்சராக நியமித்தமை தொடர்பான கரிசனைகளையும் தமது கட்சி ரணில் விக்ரமசிங்கவிடம் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது சிறந்ததாக காணப்படுமென சிறிலங்கா அதிபர் சிந்தித்திருக்கலாமென அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் பொதுஜன பெரமுன
சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிகளவான பொதுஜன பெரமுனவினர் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில், தமது கட்சி உறுப்பினர் ஒருவரின் பதவியை சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவது நியாயமற்றது என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தவறை தவறென சுட்டிக்காட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அஞ்சியதில்லை எனவும் இதற்கமைய ரணில் விக்ரமசிங்க இன்று மேற்கொண்ட நடவடிக்கை தவறானதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.