தென்னிலங்கையில் திருமணம் ஒன்றால் ஏற்பட்ட விபரீதம்: பொலிஸார் வெளியிட்ட தகவல்
காலியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, கொஸ்கொட சுஜீ தரப்பினால் முன்னைய துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி இரவு அஹுங்கல்ல, முத்தரமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்று, அங்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் திருமணம்
திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவரான கொஸ்கொட சுஜியின் நண்பரான குடு மதுஷா என்ற பெண்ணின் மகளைத் திருமணம் செய்ய விரும்பிய இளைஞனே உயிரிழந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
ரத்கம விதுர மற்றும் லொகு பட்டி ஆகியோருக்கு நெருக்கமான அஹுங்கல்லே பாபா என்ற புனைப்பெயர் கொண்ட நபரே இளைஞனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் அஹுங்கல்லே பாபாவின் சகோதரி என விசாரணைகளில் இருந்து தற்போது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் கொஸ்கொட சுஜீயின் தரப்பினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கி சூடு
அஹுங்கல்ல, உரகஹா வீதியின் கல்வெஹர பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியரும் 04 மாதக் குழந்தையும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் தமது வியாபார நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அஹுங்கல்ல, உரகஹா வீதியின் கல்வெஹெர பிரதேசத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் தம்பதியும் 04 மாதக் குழந்தையும் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் 04 மாத குழந்தையும், குழந்தையின் தந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.