வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! சூறாவளி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய இணைப்பு
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாற்றமடைந்து, கிழக்கு ஈசான மூலைப் பகுதியில் பயணிக்கலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறி, பங்களாதேஷ் கடற்பகுதியை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இதனால் இடியுடன் கூடிய மழை மற்றும் பாரிய அலைகள் உருவாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடும் காற்று மற்றும் கடல் பிரதேசங்களில் பெரும் அலைகள் காணப்படுவதால் அவதானமாக செயற்படுமாறு கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய – மேற்கு வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் பயணிக்கும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வகையில் வடக்கு, மேற்கு கடற்பகுதிகளில் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் அந்தக் கடற்பகுதியில் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.