துறைசார் மேற்பார்வைக் குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்
அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்துக்கு சம்பந்தமான, அரசுடைமையுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் இது வரை நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படாத 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
இதுகுறித்து குறித்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியம்
“சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஆண்டறிக்கைகள் நவம்பர் 30 க்கு முன்னர் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், அரச நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்கக்கூடிய அரச தொழில் முயற்சி திணைக்களத்துக்கு சம்பந்தமான நிறுவனங்கள் தொடர்பான அறிக்கையொன்றையும் வழங்க வேண்டும்.
குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான தோட்டங்கள் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள பல ஏக்கர்கள் அளவான காணிகளில் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு வழங்க தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டும்.