அக்கரைப்பற்று வயல் பிரதேசத்தில் உயிருக்குப் போராடும் யானை!
அக்கரைப்பற்று – இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக கால்வாய்க்குள் வீழ்ந்து காட்டு யானையொன்று உயிருக்கு போராடி வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.
இக்காட்டுயானை கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளையில் கால்வாய்க்குள் வீழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த அக்கரைப்பற்று பொலிஸார் அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைக்கு சிகிச்சையளித்தனர்.
அத்தோடு பெங்கோ இயந்திரத்தின் உதவியுடன் கால்வாய்க்குள் அகப்பட்ட யானையினை மீட்பதற்காக பல மணி நேரம் முயற்சித்தும் இக்காட்டு யானையினை கால்வாயினை விட்டு அப்புறப்படுத்த முடியவில்லை.
நீர் அருந்துவதற்காக வருகை தந்த வேளையில் இக்காட்டு யானை கால்வாய்க்குள் வீழ்ந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், இக்காட்டு யானை வீழ்ந்த போது குறைந்தளவிலான நீரே காணப்பட்டது.
ஆனால் தற்போது இக்கால்வாயின் மூலம் அதிகளவிலான நீர் ஓடிக் கொண்டிருப்பதாகவும் இதன்மூலம் யானையினால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.