இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலி
இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பலஸ்தீனத்தின் காஸாவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸாவின் வடபிராந்தியத்தில் ஜபாலியா, பேய்த் லாஹியா பகுதிகளிலும் காஸாவின் மத்திய பகுதியிலுள்ள அல் ரேமால், காஸாவின் மேற்குப்பகுதியிலுள்ள அல் ஷாதி முகாம், தென்பகுதியிலுள்ள கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் 5,087 பலஸ்தீனியர்கள் பலி
கான் யூனிஸ் நகரில 48 பேரும், ரஃபாவில் 57 பேரும், காஸா மத்திய பகுதியின் அல் வுஸ்தாவில் 168 பேரும் காஸா சிற்றியில் 66 பேரும் வடக்கில் 44 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என பலஸ்தீன சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 7 ஆம் திகதியின் பின் இதுவரை இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 5,087 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்னர். இவர்களில் 2055 சிறார்கள், 1119 பெண்களும் அடங்குவர் என காஸாவிலுள்ள ஹமாஸ் நிர்வாகத்திலுள்ள காஸா சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது.
அத்துடன் 14,245 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களினால் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.