கர்பா நடனத்தின் போது மாரடைப்பு: நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் ஒரு அங்கமான கர்பா நடனத்தின்போது 6 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான விவகாரம் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
நவராத்திர கொண்டாட்டத்தின்போது கர்பா நடனமாடிக்கொண்டிருந்த பெண், 12ஆம் வகுப்பு மாணவர் உள்பட 6 பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக, அவர்களது உறவினர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை அளித்தவர்கள் அளித்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதே நவராத்திரிக் கொண்டாட்டத்தின்போது, குஜராத் மாநிலத்தில் மட்டும் 22 பேர் மாரடைப்பால் மரணமடைந்தாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 15ஆம் தேதி முதல் 9 நாள்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய இதயநோயியல் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் திங்கள்கிழமை சந்தித்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், கர்பா நடனத்தின்போது ஏற்பட்ட மாரடைப்பு சம்பவங்கள் தொடர்பான தரவுகளை திரட்டி, ஆராய்ந்து, காரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் மருத்துவ நிபுணர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கரோனா தாக்குதலுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுவது அதிகரித்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏராளமான இளைஞர்களும் மாரடைப்புக்கு பலியாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.