சாணக்கியனின் நடவடிக்கையால் பீதியடைந்த தேரர்! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
மட்டக்களப்பில் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக குறித்த பகுதியில் உள்ள பௌத்த மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களை எச்சரிக்கும் கருத்து
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்தும் சிங்கள மக்களை எச்சரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரையிலுள்ள சிங்கள விவசாயிகளை குறித்த பகுதியில் இருந்து விரட்டும் நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்திருந்தார்.
அப்பகுதியில் நாம் அமைத்திருந்த விகாரையை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையையும் காணாமல் ஆக்கியிருந்தார்.
இவ்வாறான விடயங்கள் மற்றும் சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டோம்.
சிங்கள விவசாயிகளின் பிரச்சினை
இலங்கையின் சாதாரண குடிமக்களாக எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிங்கள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்ட்ட தரப்பினர் உடனடியாக தீர்ப்பளிக்க வேண்டும்.
யுத்தத்தின் போது சிங்கள மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை தற்போதும் அவர்கள் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது”- என்றார்.