இரவு நேரபணி புரிய பெண்களுக்கு அனுமதி : அமைச்சரவை வெளியிட்டுள்ள முக்கிய முடிவு
பெண்களுக்கான இரவு நேரப்பணிக்கு அனுமதிக்கும் விதமாக புதிய சட்டமொன்றினை அமைச்சரவை அறிமுகப்படுத்தியுள்ளது.
1954 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல் சட்ட எண் 19 ன் படி பெண்கள் இரவில் வேலை செய்ய அனுமதி வழங்கும் படி திருத்தச் சட்டவரைவொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தகவல் தொழில்நுட்ப மற்றும் அறிவு செயன்முறை வெளிவள நிறுவனங்கள், வணிகச் செயன்முறை, வெளிவள நிறுவனங்கள் மற்றும் பிற நாடுகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கான கணக்கியல், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பணிகளைக் கையாளும் அலுவலகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்காகவே இந்தத் திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல் திருத்தச் சட்ட வரைவுக்கு அட்டர்னி ஜெனரலின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட வரைவுமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.