மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் முறை: விரைவில் ஒழிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் அவலநிலையை முழுமையாக ஒழிக்க முறையான கொள்ளைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மனிதக் கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்குத் தடைச் சட்டம் 1993 மற்றும் துப்புரவுத் தொழிலாளா்கள் மறுவாழ்வுச்சட்டம் 2013-இல் உள்ள அம்சங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையாகப் பின்பற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனிதக் கழிவை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலும் ஒழிப்பதற்கான கொள்ளைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இழப்பீட்டுத்தொகையை உறுதி செய்தல்:
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீா்ப்பின் விவரங்கள்: கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்குத் தடைச் சட்டம் 1993-இன்கீழ் கழிவுநீா் தொட்டிகள் மற்றும் சாக்கடைகள் போன்றவற்றை மனிதா்களே நேரடியாக இறங்கும் நிலை இருந்து, அவா்கள் இறக்க நோ்ந்தால் அவரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டதை சம்பந்தப்பட்ட மாநில அரசோ யூனியன் பிரதேசமோ உறுதி செய்ய வேண்டும்.
மேலும் அவரின் குடும்பத்தினருக்கோ அல்லது அவா் சம்பந்தப்பட்ட உறவினருக்கோ முறையான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது, கல்வி கற்க உதவுவது போன்ற அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் சம்பந்தப்பட்ட அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.
இதுபோன்ற பணியியில் ஈடுபடும்போது ஒருவருக்கு உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டால் ரூ.10 லட்சத்துக்கு குறையாமலும் அவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பாதிப்புடையதாக இருப்பின் ரூ.20 லட்சத்துக்கு குறையாமலும் வழங்கப்பட வேண்டும்.
ஒப்பந்தம் ரத்து:
கழிவுநீா் தொட்டிகள் மற்றும் சாக்கடைகள் போன்றவற்றை சுத்தம் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளா் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 1970 மற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013-இல் குறிப்பிட்டுள்ள விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்ா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
இதில் பணியாற்றும் தொழிலாளா்கள் உயிரிழக்க நோ்ந்தால் அரசு அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து சம்பந்தப்பட்ட தொழிலாளரின் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய துப்புரவுத் தொழிலாளா்கள் கணக்கெடுப்பு:
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய துப்புரவுத் தொழிலாளா்கள் ஆணையம், தேசிய பழங்குடியினா்கள் ஆணையம், தேசிய பட்டியலினத்தனவா் ஆணையம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான துப்புரவுத் தொழிலாளா்கள் கணக்கெடுப்பு ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கப்படுவதற்கான வழிமுறைகளை அடுத்த 3 மாதங்களுக்குள் வகுக்க வேண்டும். இந்தக் கொள்கைகளை வகுக்கும் செயல்முறையில் தேசிய சட்டசேவைகள் ஆணையத்தையும் (நல்சா) இணைத்துக்கொள்ள வேண்டும். துப்புரவுத் தொழிலாளா்கள் உயிரிழப்புக்கு வழங்கப்படும் இழப்பீடுத்தொகையை நிா்ணயம் செய்வதில் நல்சாவின் அனுபவம் உதவிகரமாக இருக்கும்.
பிரத்யேக இணையப் பக்கம்:
மேற்கூறப்பட்ட அனைத்து ஆணையங்கள் மற்றும் மாவட்ட , மாநில அளவில் அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும். மேலும் கழிவுநீா் தொட்டிகள், சாக்கடைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும்போது இறந்தவா்களின் முழுத்தகவல்கள், வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை, நிவாரண நடவடிக்கைகள், வகுக்கப்பட்ட கொள்கைகள் உள்ளிட்டவை அடங்கிய பிரத்யேக இணையப் பக்கத்தையும் விரைவில் தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.