கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ள ஷி யான் 6
சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலான ஷி யான் 6 இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குள்ளான குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சீனாவின் புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை சென்றடைவதற்கு கடந்த 10 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த கப்பல் துறைமுகத்தில் நங்கூரமிடப்படுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
எனினும், தெரிவிக்கப்பட்ட திகதிக்கு முன்னதாக இன்றைய தினம் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ருஹுணு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்துடனும் (NARA) ஷி யான் 6 உடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து தாம் விலக முடிவு செய்துள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்ததையடுத்து தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், Shi Yan 6 கப்பல் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, இது தொடர்பில் சில கண்டனங்களை அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.