இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா…!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில், இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் (2023) மொத்தமாக 1,094,019 பேர் வருகை தந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த காலகட்டத்தில், சுற்றுலாப் பயணிகளின் தினசரி சராசரி வருகை 3,534 ஆக பதிவாகியுள்ளது, இது முந்தைய வாரத்தின் சராசரியாகவுள்ள 3,359 உடன் ஒப்பிடும்போது முன்னேற்றத்தைக் காண்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் மொத்தம் 23,073 சுற்றுலாப்பயணிகளும், இரண்டாவது வாரத்தில் 23,434 இதே எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் இன்னும் அதிகரித்து 31,265 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் இந்தியா
ஆனால், ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்த 147,789 சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கில் 53 சதவீத வருகையையே இலங்கை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய மாதங்களைப் போலவே, இம்மாதமும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மிகப்பெரிய ஆதாரமாக இந்தியா விளங்குகிறது, 20,369 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து மொத்த வருகையில் 26 சதவீத பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளது.
அந்த வரிசையில் 7,089 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து 9 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தினை ரஷ்யாவும், ஐக்கிய இராச்சியம் 6,287 சுற்றுலாப்பயணிகள் வருகையுடன் 8 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் ஜெர்மனி, சீனா, அவுஸ்திரேலியா, மாலைதீவுகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.