யாழில் அபேக்ஷா தமிழ் நாடகத் திருவிழா இன்று ஆரம்பம்…!
கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் நாடகத் திருவிழா நாளையும் நாளை மறுதினமும் (25,26,27) என தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
கலாசார அமைச்சின் நாடக மத்திய நிலையமாக விளங்கும் டவர் மண்டபத்தின் தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயபிரகாஷ் தலைமையில் ஆரம்பமாகிய இவ் நாடகத் திருவிழாவி்ல் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல கலந்து சிறப்பித்திருந்தார்.
கொழும்பில் எல்பிஸ்டன் மற்றும் டவர் அரங்கில் வருடந்தோறும் நடைபெறுகிற நாடக திருவிழாவானது டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் மைத்திரி குணரட்ன, கலாநிதி ஆறுதிருமுருகன், யூனியன் கல்லூரி அதிபர் வரதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், உட்பட கல்வி மற்றும் கலாசார அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.