இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்!
இந்தியாவினால் உளவுக் கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 கொழும்புத்துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு மத்தியில் சீனாவின் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இலங்கையை வந்தடைந்த சீனக் கப்பல்
புவி பௌதீகவியல் விஞ்ஞான ஆய்வுகளுக்கான கப்பலாக சீனா அடையாளப்படுத்தியுள்ள ஷி யான் 6, கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதை இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று உறுதி செய்திருந்தது.
இதையடுத்து தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கப்பலானது 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்கிறது.
எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசு சீனாவின் உளவு கப்பலுக்கு அனுமதியளித்திருக்கிறது. இதற்கு காரணம் சீனா, இலங்கைக்கு செய்த பொருளாதார உதவிதான் என பல அரசியல்வாதிகள் பேசி வருகிறார்கள்.
இந்தியாவும் இலங்கைக்கு ஏராளமான உதவிகளை செய்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் உறவை விட, சீனாவின் உறவையே இலங்கை அதிகம் எதிர்பார்க்கிறது.
இனி வரும் காலங்களிலாவது மத்திய அரசு இலங்கையிடம் இது குறித்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.