;
Athirady Tamil News

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

0

கொக்குத்தெடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 30 அல்லது நவம்பர் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியுமென அகழ்வுப் பணிக்கு பொறுப்பானவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியுமான வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

இந்த அகழ்வு நடவடிக்கைகளின் எதிர்கால நிலை குறித்து தலைநகரில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே இதனை தெரிவித்துள்ளார்.

கமராக்கள் பொருத்தும் பணிகள் தமது மேற்பார்வையில் நடைபெற்றதாகக் தெரிவித்த அவர் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழிகளை சுற்றி சிசிடிவி கமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

மனித குழியின் அகழ்வுப் பணிகளுக்கு சுமார் 5.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதோடு, நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்குப் பதிலாக கணக்காளர் (நீதி நிர்வாகம்) ஓகஸ்ட் 22ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் “கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து நீதவான் விசாரணைக்கான மதிப்பீடு” என்ற தலைப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில், 5,663,480.00 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றில் அறிக்கை செய்ய நடவடிக்கை
செப்டெம்பர் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவடைந்ததோடு, கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலும்புக்கூடுகளை மீட்கும் விசாரணையில் முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார்.

“கிடைத்த ஆதாரங்களை முறையாக ஆய்வு செய்வதற்காக இந்த 2 மாத காலத்திற்கு இது நிறுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஏனைய பொருட்களை ஆராய்ந்து உண்மைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், இந்த அகழ்வு மற்றும் விசாரணையை தொடரலாமா வேண்டாமா என நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை வரை காத்திருக்கிறோம். என்ன தீர்மானம் எடுக்கப்படும் என்பதுதான் விடயம்.”

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்களின் பின்னர் பதினேழு பேரின் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாயை பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் இந்த வருடம் ஜூன் 29ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.