இலங்கையில் பெரும் துயர சம்பவம்: மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த சோகம்!
மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிந்த மறு நாளே தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
59 வயதான ஜாதுங்கே பந்துசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த திங்கட்கிழமை (23-10-2023) தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தனது தாயை சரிவர கவனித்துக்கொள்ளவில்லை என எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரை பொது மக்கள் முன்னிலையில் திட்டியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வீடு திரும்பியதும் தனது கணவர் கூறியதாக மனைவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பந்துசேனவின் தாயாருக்கு 90 வயதாகின்றது. மகள் (ஜாதுங்கே பந்துசேனவின் சகோதரி) வீட்டிலிருந்த தாயை, மகன் அழைத்து வந்து கவனித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
“நாங்கள் எங்கள் இரண்டு கண்களினால் பார்த்துள்ளோம், மகன் தன் தாயை கவனித்துக்கொண்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும், தனது தாயை பந்துசேன என்ற சகோதரன் சரியாக கவனிப்பதில்லை என அவரது சகோதரி கிராம அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தையடுத்து பந்துசேன தனது மனைவியிடம் இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.
சம்பவத்தன்று பிற்பகல் முதல் பந்துசேன வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், அவரது மருமகனும் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், அடுத்த நாள் காலை அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மகனின் மரணத்தை அறிந்த தாய் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (24-10-2023) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.