குஜராத் உயா்நீதிமன்றத்தில் பெண் நீதிபதியிடம் உரக்கக் கத்திய சம்பவம்:ஆண் நீதிபதி மன்னிப்பு கோரினாா்
குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்தபோது பெண் நீதிபதியிடம் உரக்கக் கத்தியதற்காக ஆண் நீதிபதி மன்னிப்பு கோரினாா்.
குஜராத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ், மெளனா பட் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கு ஒன்றில் கடந்த திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அப்போது மூத்த நீதிபதியான பிரேன் வைஷ்ணவ் உத்தரவின் விவரத்தை வாசித்தாா். அந்த உத்தரவை ஏற்காத பெண் நீதிபதி மெளனா பட், வைஷ்ணவிடம் தனது கருத்தை முன்வைத்தாா்.
இதனால் பொறுமை இழந்த வைஷ்ணவ், நீதிமன்றத்தில் அனைவா் முன்னிலையிலும் நீதிபதி மெளனா பட்டிடம் உரக்கக் கத்தினாா்.‘ உத்தரவில் உடன்பாடு இல்லாவிட்டால், தாங்கள் தனியாக உத்தரவு பிறப்பிக்கலாம்’ என்று பட்டிடம் கூறிவிட்டு, நீதிமன்ற அறையில் இருந்து வைஷ்ணவ் வெளியேறினாா். இதுதொடா்பான காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது.
இதைத்தொடா்ந்து தசரா பண்டிகை காரணமாக செவ்வாய்க்கிழமை விடுமுறையில் இருந்த உயா்நீதிமன்றம், புதன்கிழமை கூடிய நிலையில், நீதிபதிகள் வைஷ்ணவ் மற்றும் மெளனா பட் அமா்வு முன்பாக வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெளனா பட்டிடம் தான் உரக்கக் கத்தியது தவறு என்று கூறி, அதற்கு வைஷ்ணவ் மன்னிப்பு கோரினாா்.