உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்காதா? பணிகள் புறக்கணிப்பு – வருவாய்த்துறை அலுவலர் சங்கம் முடிவு!
மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் இன்று 26ம் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கி நடைபெறு வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். இந்த திட்டம் தொடர்பாக கடந்த வாரம் இன்னொரு அறிவிப்பு வெளியானது.
அதில், உரிமை தொகை குறித்து அடிக்கடி மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்படும், மாதந்தோறும் சிறப்புக் கூட்டங்களை நடத்தி அதில் பணவசதி கொண்டவர்கள் யாராவது மகளிர் உரிமை தொகை பெறுவது கண்டறியப்பட்டால் அவர்கள் பெயர் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே வரும் அக்டோபர் 26ம் தேதி முதல் உரிமைத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் காலவரையின்றி புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) திடீரென அறிவித்தது.
இதனை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் எம்.பி. முருகையன் உறுதி செய்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் “இந்த திட்டத்திற்காகச் சிறப்பு அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டுள்ள ஏஐஎஸ் சிறப்பு அதிகாரி செயல்பாடுகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இந்த திட்டத்தில் சில சிக்கல்கள் இருப்பதால், அது தொடர்பாக பேச சென்றால், அதில் சிறப்பு அதிகாரி ஆர்வம் காட்டுவதில்லை. ஊழியர்கள் சொல்லும் பிரச்சனையைக் கேட்காமல் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை மட்டும் தருகிறார்.
அவரது போக்கும் நடத்தையும் ஊழியர்களுக்கு விரோதமாக இருக்கிறது. இதுவே மகளிர் உரிமைத்தொகை பணிகளைப் புறக்கணிக்க முக்கிய காரணமாகும்” என்று தெரிவித்திருதார். மேலும், இந்த விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அக்டோபர் 26ம் தேதி மாலை 4.45 மணிக்கு அனைத்து அதிகாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள், அப்படியும் பிரச்சனை தீர்க்கப்படவில்லையானால், நவம்பர் 21ம் தேதி ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் இன்று மாலை 4.45 மணிக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மகளிர் உரிமை தொகை தொடர்பான அனைத்து பணிகளையும் புறக்கணித்தால், அது உரிமை தொகை மேல்முறையீடு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால், இந்த ஆர்ப்பாட்டத்தின் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.