கடலின் அடியில் ஆய்வு செய்ய சீனக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு : நாரா விஞ்ஞானி தெரிவிப்பு
சீனக் கப்பலான ‘ஷி யாங் 6’ உடன் சேர்ந்து, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்து சமுத்திர கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நேற்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதித்திருந்த போதிலும், கடலின் அடிப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாராவின் முதன்மை விஞ்ஞானியான கே. அருளானந்தன், கடலின் வெப்பநிலை மாற்றம் காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து நீர் தூண்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
மிகக் குறைந்த ஆய்வுகள்
இந்த ஆய்வின் வாயிலாக எதிர்கால வறட்சி மற்றும் மழைக்காலங்களை குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே கணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது விவசாயத்துறைக்கு பாரிய உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது விவசாயத்திற்கு பாரிய உதவியாகவிருக்கும் எனவும் அவர் தெரியப்படுத்தினார்.
உலகிலேயே மிகக் குறைந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் கடல் பரப்பாக இந்தியப் பெருங்கடல் திகழ்கிறது, இப்போது சீனாவுடன் இணைந்து நாங்கள் கூட்டு ஆராய்ச்சி நிகழ்த்த இருக்கிறோம், அதாவது எமது விஞ்ஞானிகளும் கப்பலில் இருப்பார்கள், அதனால் இங்கிருந்து தரவுகளை சேகரித்து செல்ல யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், தரவு கண்டுபிடிப்புகளை நாங்களே வைத்திருப்போம், எனவும் அவர் கூறினார்.
இருப்பினும், கடலுக்கு அடியில் எந்த ஒரு ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்றும் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கடலுக்கடியிலுள்ள, கனிமங்கள் மற்றும் எரிவாயு வைப்புகளைக் கண்டறியக்கூடிய தரவுகளை சேகரிக்க அனுமதி இல்லை என்றும் இது நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது எனவும் கே. அருளானந்தன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வரை மாத்திரமே கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் எந்தவொரு ஆய்வுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.