யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன்
யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.
எதற்கு எடுத்தாலும் இராணுவம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மைய நாட்களில் காவல்துறையினரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அதாவது இராணுவத்தினை யாழில் தொடர்ச்சியாக இங்கே நிலைநாட்டுவதற்காகக் கூட இந்தச் செயற்பாடுகள் அமைந்திருக்கலாம்.
கொழும்பில் அதிபருக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்டப்பகலில் கூடி கேக் வெட்டியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இன்று வரை 8 பேரை மட்டுமே கைது செய்துள்ளார்கள்.
காவல்துறையினரின் செயற்பாடு
இதிலிருந்து எமக்கு ஒன்று புரிகின்றது. காவல்துறையினரின் செயற்பாடு மிக மந்தகதியில் உள்ளது.
அதாவது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே காவல்துறையினர் இவ்வாறு செயற்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறை அதிகாரம்
காவல்துறையினரால் சிவில் நிர்வாகத்தினை திறமையாக செயல்படுத்த முடியவில்லை என கருதினால் காவல்துறை அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள்.
முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா கூட நீண்ட நாட்களாக கோரிக்கையினை முன்வைத்து வருகின்றார்.
காவல்துறையினரால் சிவில் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தி செயற்படுத்த முடியா விட்டால் அதனை எங்களிடம் தாருங்கள்” என்றார்.