மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்
மன்னார் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினரால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் காரணத்தால் குறித்த போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று இடம் பெற்றுள்ளது.
பொருளாதார இழப்புக்கள்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு தமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திப்பதாகவும், பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திப்பதாகவும், அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆகவே கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலவருடமாக கோரிக்கை விடுத்ததன் படி பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடை முறைப்படுத்தப்படாமல் இருப்பதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 12 ஆம் திகதியன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேய்ச்சல் தரை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றார்கள் என்பது வெளிப்படையாகவே புலனாகின்றது, எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்ததோடு,மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.