ரணிலுக்கு பெரும் சிக்கல்! மொட்டுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக பொதுஜன பெரமுன இன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து, இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படுமென கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது, இது தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் சில உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிருப்தியடைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன
அண்மையில் சிறிலங்கா அமைச்சரவையில் ரணில் விக்ரமசிங்க மாற்றங்களை மேற்கொண்ட நிலையில், இது தொடர்பில் பொதுஜன பெரமுன அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், விமர்சனங்களையும் முன்வைத்திருந்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால் தற்போதைய சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படுமென மொட்டு கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.