முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்திய நாடு இது தான்
உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தினை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாட்டை முன்னிட்டே இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமராக தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கும் ரிஷி சுனக் செயற்கை நுண்ணறிவு குறித்த இங்கிலாந்தின் புதிய பரிமாணத்தை பெருமைப்படுத்தி கூறியுள்ளார்.
மிகப்பெரிய மாற்றங்களை
உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை அறிவித்த ரிஷி சுனக், இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவை மேம்படுத்தவும், புதிய செயற்கை நுண்ணறிவு வகைகளை ஆய்வு செய்து சோதிக்கவும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்புரட்சி, மின்சாரம் கண்டுபிடிப்பு, இணையத்தின் தோற்றம் போல செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளும் உலகில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய வகை செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஆய்வு செய்வதிலும், சோதனை செய்வதிலும் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதால், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகமாக இங்கிலாந்து விளங்கும் எனவும் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவானது பல்வேறு முன்னேற்றங்களை வழங்கும் அதே சமயம் பல்வேறு ஆபத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதை செயற்கை நுண்ணறிவு எளிதாக்கும், இதனால் பயங்கரவாத குழுக்கள் இதனைப் பயன்படுத்தி பெரிய அளவில் அழிவைப் பரப்ப முயற்சிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளது.
இவ்வாறு இரு வேறுபட்ட கோணங்களை இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது, எது எவ்வாறாயினும் முன்னேற்றத்தினை நோக்கிய பாதையினை நாம் தெரிவு செய்து பயணிக்க வேண்டும் என்பதையும் ரிஷி சுனக் வலியுறுத்தினார்.