அம்பிட்டியவின் கருத்திற்கு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை கண்டனம்
மட்டக்களப்பு இருதயபுரத்தில் வைத்து அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக அப்பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனு்ப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மட்டக்களப்பு இருதயபுரத்தில் சிலருடன் வருகை தந்து சுமனரத்தின தேரர் மீண்டும் யுத்தம் வரும், தமிழர்களையும் தமிழ் அரசியல் வாதிகளையும் வெட்டுவேன் என்று கூறியுள்ளார்.
இவருடைய கருத்தை தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
மோசமான இனவாத கருத்துக்கள்
மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று மிகப்பெரும் அழிவுகளை சந்தித்து நாடு தற்போது நிலையான அமைதியையும், இனப் பிரச்சினைக்கான நிலையான தீர்வையும் நோக்கி பயணிக்கின்ற வேளையில், இவருடைய மிக மோசமான இனவாத கருத்துக்கள் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் அழிவுக்கே இட்டுச் செல்லும்.
இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் போதிக்க வேண்டிய மதத் தலைவர் ஒருவர் நாட்டையும் மக்களையும் அழிவைநோக்கி இட்டுச்செல்லும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த நாட்டில் இவரை போன்ற மதத் தலைவர்களினாலேயே இன்று இனவாத மதவாத பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்கள் இனவழிப்புக்குட்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள நிலையில் அதற்கான சர்வதேச விசாரணை ஒன்றை கோரியுள்ள நிலையில் தேரரின் இந்தக் கருத்தினையும் எமது தரப்பு சாட்சியாக எடுக்க வேண்டியுள்ளது எனவும் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச. கீதன் தெரிவித்துள்ளார்.