உறவுகளை தொலைத்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்
காணாமல் போன தம் உறவுகளை தேடி வீதி வீதியாக அழுது புலம்பி திரியும் உறவுகளை நோக்கி பொத்தம் பொதுவாக கை நீட்டி குற்றம் சாட்ட நான் என்றைக்கும் மனதளவில் கூட விரும்பியதும் இல்லை. அவ்வாறு குற்றம் சாட்டுவதும் பாவப்பட்ட செயல் என்றும் இன்றும் நம்புகிறேன்.
ஆனால் நீண்ட நெடிய இந்த போராட்டத்தினால் இவர்கள் மத்தியில் பிரிவுகளையும் , பிரச்சனைகளையும் தோற்றுவிக்க சலுகைகள் முதல் பலதை கொண்டு பலர் ஊடுருவி விட்டார்கள். சிலர் அதற்கு எடுபட்டு போனது வருத்தமே ..
அந்த சிலரை விமர்சிப்பது கூட ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி விடுமோ என நினைத்ததால் பலரும் சிலதை கண்டும் காணாமலும் விலகி கொண்டனர்.
இதனால் நேற்று நிலைமை கை மீறி போய் விட்டதோ என எண்ண தோணுகிறது.
முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தின் போது இவர்கள் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது , அங்கிருந்தவர்கள் அதனை சமாளித்துக்கொண்டனர். ஊடகங்களும் அதனை பெரிது படுத்தாது விட்டு சென்றது.
ஆனால் இன்று வவுனியாவில் தங்களுக்குள் மோதிக்கொண்டவர்கள். பொலிஸ் நிலையம் வரை செல்லாது தவிர்த்து இருக்க வேண்டும். அவ்வாறு சென்று இருந்தாலும் பொலிஸ் நிலையத்தில் சமாதானமாகி விலகி சென்று இருக்க வேண்டும்.
ஆனால் போராட்டங்கள் எங்கும் பொலிசாரின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்கள் இன்று அதே பொலிஸாரிடம் சென்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பொலிசாரிடம் முறையிடுகிறார்கள்.
எந்த பொலிஸார் எங்கள் போராட்டத்தை நசுக்குகின்றார்கள் , எங்களை அச்சுறுத்துகிறார்கள் என் குற்றம் சாட்டி நின்றோமோ , அதே பொலிசாரிடம் சென்று எமக்குள் மாறி மாறி குற்றம் சாட்டி முறையிட்டு நிற்கிறோம்
தயவு செய்து பிரச்சனைகளை உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள்.
உறவுகளை இழந்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்.