இனி இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது? மீறினால் நடவடிக்கை – அரசு அதிரடி தடை!
அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலம்
அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசு பணியாளர்கள் நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் “அசாம் அரசுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அரசு அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது. விதியை மீறினால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் மற்றும் கட்டாய பணி ஓய்வு வழங்கப்படும். மேலும், இந்த சட்டம் பெண் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் திருமணம்?
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில் ”பல திருமணங்கள் செய்ய மத ரீதியாக அனுமதி உள்ளவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சில அரசு ஊழியர்கள் இரண்டு திருமணம் செய்து கொள்கின்றனர்.
பின்னர் இரண்டு மனைவிகளுக்கு இடையே பென்ஷன் தொகையை பெறுவதில் சண்டை நடக்கிறது. இது ஏற்கனவே உள்ள சட்டம் தான். இப்போது நடைமுறைப் படுத்தியுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களின் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அரசு அனுமதியின்றி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை என்ற விதி 58 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த விதி நாளடைவில் பின்பற்றப்படுவதில்லை என கூறப்படுகிறது.