அடுத்த தேர்தலில் ரணிலுக்கா ஆதரவு..! பெரமுன எம்.பி வெளியிட்ட தகவல்
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இதனை நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமது கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் சில உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டிருந்தாலும், கட்சி என்ற வகையில் இது தொடர்பிலான எந்தவொரு தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்து
உரிய காலத்தில், கட்சி என்ற அடிப்படையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படுமென எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ஆக்கியதாகவும் அவரை அதிபர் ஆக்குவதற்கு தமது கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் எஸ்.எம். சந்திரசேன நினைவூட்டியுள்ளார்.
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பேச்சுக்களை முன்னெடுத்ததன் பின்னர் தீர்மானங்களை மேற்கொள்ள ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.