இஸ்ரேல் ஹமாஸ் போர்… பொருளாதாரக் கணக்கு பார்க்கும் நாடுகள்: ஜேர்மனியின் நிலை
யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், உலகம் என்பது ஒரு சமுதாயம் என்னும் உண்மையை மட்டும் மாற்ற முடியாது. எல்லா நாடுகளுமே, ஏதாவது ஒரு விடயத்துக்காக மற்றொரு நாட்டை சார்ந்துதான் ஆகவேண்டும்.
உலகம் என்னும் சமுதாயம்
எண்ணெய்க்காக சில நாடுகள், அரிசிக்காக சில நாடுகள், கோதுமைக்காக சில நாடுகள், மின்னணுப்பொருட்களுக்காக சில நாடுகள், ஏன், மருந்துகளுக்காக சில நாடுகள் என, ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டைச் சார்ந்தே வாழும் ஒரு நிலை காணப்படுவதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆக, உலக நாடுகளில் எந்த நாடுகளில் பிரச்சினையானாலும் அது இன்னொரு நாட்டை பாதிக்கத்தான் செய்யும். எனவே, போர் என்று வந்தாலே, ஒருபக்கம் போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் மீது மனிதாபிமான அடிப்படையில் அக்கறை காட்டினாலும், இன்னொரு பக்கம், சுயநலமாக நம் நாட்டுக்கு என்ன இழப்பு என்று எண்ணாத நாடுகளும் இருக்கமுடியாது.
உக்ரைன் போர் துவங்கியபோது, கோதுமை இறக்குமதி குறித்து பல நாடுகள் கவலையடைந்தது நினைவிருக்கலாம்.
இஸ்ரேல் ஹமாஸ் போர்: ஜேர்மனியின் நிலைப்பாடு
ஆக, இஸ்ரேல் ஹமாஸ் போர் நடக்கும் நிலையிலும், இதே போன்றதொரு எண்ணம் உருவாகியிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஜேர்மனியைப் பொருத்தவரை, நீண்ட கால வர்த்தகக் கூட்டாளியான இஸ்ரேல் நாட்டுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் ஏற்றுமதி செய்கிறது ஜேர்மனி.
ஆனால், தொழில்நுட்ப பரிமாற்றம், இயற்கை அறிவியல் மற்றும் இயற்பியல்ஆகிய துறைகளின் ஆய்வுகளில் ஒத்துழைப்பு ஆகிய விடயங்களில் 1960களிலிருந்தே இஸ்ரேல் ஜேர்மனிக்கு மிக முக்கியமான நாடாகும்.
இஸ்ரேல், சைபர் பாதுகாப்பு, உயிரி தொழில்நுட்பம், மருத்துவம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் உணவுத்துறையில் புதுமைகள் ஆகிய பல விடயங்களில் முன்னணி வகிக்கும் நாடாகும். ஆகவே, இஸ்ரேலும் ஜேர்மனியும் வலிமையான கூட்டாளர்களாக திகழவேண்டும் என தொழில்துறைத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் போரால், பல திட்டங்கள் தற்காலிகமாகவாவது இடைநிறுத்தப்படும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
இஸ்ரேலில், பல துறைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோர், தங்கள் வேலைகளை விட்டு விட்டு போருக்குச் சென்றுவிட்டார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டார்கள், அதனால் அலுவலகங்களில் பணி செய்யும் பலர் தற்காலிகமாக பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு சம்பளம் கிடையாது.
ஆக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு எதிரான இஸ்ரேல் கரன்சியான ஷேக்கலின் மதிப்பு குறைந்துள்ளது.
மற்ற நாடுகளும் வேண்டும்
இன்னொரு பக்கம், இஸ்ரேலுக்கு எதிரணியில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றுடனும் ஜேர்மனி வர்த்தகம் செய்துவருகிறது.
கத்தார், காசாவில் பிடித்துவைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அதேநேரத்தில், காசாவில் 7,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகக் கூறபப்டும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கிறது.
ஜேர்மனிக்கோ இரு தரப்பு நாடுகளும் வேண்டும். ஆக, போர் முடியவேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர, ஜேர்மனிக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுக்கும் வேறு வழியில்லை!