;
Athirady Tamil News

சர்வதேசத்திற்கு தவறான புரிதலை ஏற்படுத்த முனையும் சிறிலங்கா : ராஜாராம் கண்டனம்

0

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.

இதனை அரசாங்கமும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ராஜாராம் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயற்பாடானது அரசாங்கத்தின் மீதும் காவல்துறையினர் மீதும், நாட்டின் சட்டத்தின் மீதும் சர்வதேசம் தவறான புரிதலை ஏற்படுத்தகூடிய ஒரு நிலைமை ஏற்படலாம், எனவே உடனடியாக இது தொடர்பாக அரசாங்கமும் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இன்று எமது நாடு மிகவும் மோசமான பொருளாதார பின்னடைவை சந்தித்து மெல்ல மேலே எழுந்து வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

சுமனரத்ன தேரரின்
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டமாக இது இருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் சுமனரத்ன தேரரின் செயற்பாடானது தமிழர்கள் மீதும் குறிப்பாக வடகிழக்கு மக்கள் மீது குரோதத்தை ஏற்படுத்துகின்ற வகையில் வார்த்தை பிரயோகம் இருக்கின்றது. இது தொடர்பாக இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

அதிபர் ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றார். ஆனால் பௌத்த மத தலைவர் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என கோசமிடுகின்றார்கள்.

நாட்டின் நிலைமை
இதனை அரசாங்கமும் காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதே செயலை தமிழ் குருக்களோ அல்லது கிறிஸ்தவ பாதிரியாரோ அல்லது முஸ்லிம் மதத் தலைவர் ஒருவரோ செய்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்ன?

எத்தனை போராட்டங்கள் எத்தனை இன முறுகல்கள்.ஆனால் தமிழர்கள் அனைவரும் மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்கின்றார்கள்.இதனை எங்களுடைய பலவீனம் என்று அரசாங்கம் கருதிவிடக்கூடாது.

30 வருடங்களுக்கு மேலாக நாம் இந்த நாட்டில் கொடூரமான ஒரு யுத்தத்தை சந்தித்தோம். இதன் மூலமாக நாம் பெற்றுக் கொண்டது என்ன?ஒரு நாடாக பொருளாதாரம் முதல் அனைத்தையும் இழந்தோம். இதன் மூலமாக நாம் பல பாடங்களை பெற்றிருக்கின்றோம்.

கசப்பான நிலைமை
எனவே, இலங்கையில் அவ்வாறான ஒரு கசப்பான நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என அரசாங்கமும் காவல் துறையினரும் கருதினால் இந்த விடயத்திற்கு உடனடியாக ஒரு தீர்வை எடுத்து சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.

குறிப்பாக, இந்த விடயத்தில் அதிபரும் பாதுகாப்பு துறை சார்ந்த அனைவரும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் பௌத்தத்தின் புனிதத்தை பாதுகாக்க வேண்டுமானால் சட்ட நடவடிக்கை என்பது காலம் தாழ்த்தாது உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.