அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அட்டூழியங்கள்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அண்மைக்காலமாக தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான கருத்துக்களை பொதுவெளியில் பேசி வருகின்றார்.
இந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் தொடர்பிலும் அவர் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுடன், தமிழர்களை சிங்களவர்கள் வெட்டுவார்கள் எனவும் நேரடியான அச்சுறுத்தலையும் அவர் விடுத்துள்ளார்.
அம்பிட்டியே தேரருக்கு எதிராக நடவடிக்கை
அவரது இவ்வாறான வெறுக்கத்தக்க செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அது தவிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலுகுமார் உள்ளிட்ட ஒரு சில அரசியல்வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் அம்பிட்டிய தேரரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அம்பிட்டிய தேரரின் செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
நாட்டில் சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கும், அமைதியைப் பேணி காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
ஆகவே, முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அந்த வகையில் வீணான சந்தேகங்களை வெளியிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என குறிப்பிட்டார்.