வசூலிக்கப்பட வேண்டிய வரிகள்! அதிர்ச்சியளிக்கும் செய்தி: சம்பிக்க
எமது வரிச் செயற்பாட்டு முறையில் சிக்கல்கள் உள்ளன என்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1000 பில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வசூலிக்கப்படாமல் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம், ரமிஸ் மற்றும் ஆசிக்குடா போன்ற மென்பெருள் கட்டமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் மூலம் சிறியதொரு பங்கு வெற்றியே கிடைத்துள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களம் வரி வசூலிப்பில் கணிசமான அளவில் பின்னிலையில் காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் நிதிச்சுமை இரட்டிப்பாகியுள்ளது
1.2 மில்லியன் பேர் வரிக்காகப் பதிவுசெய்ய வெண்டியுள்ள நிலையில், வெறுமனே 4 இலட்சம் பேர் மட்டுமே இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்றாலும், சுங்கத் திணைக்களம் இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் மதுவரித் திணைக்களம் ஆறரை பில்லியனை வரியாக வசூலிக்கத் தவறிவிட்டது.
செலவினங்களைப் பற்றி விவாதிக்கும் முன்னர் இந்த வருவாய் ஈட்டும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது அவசியம். கடந்த ஆறு மாதங்களில், அரசின் வருவாயில் 94 சதவீதம் கடன்களுக்கான வட்டிகளை மீளச்செலுத்துவதற்கு சென்றுவிட்டது. இதனால் அரசாங்கத்தின் நிதிச்சுமை இரட்டிப்பாகியுள்ளது.
அதீதமான வட்டி வீதத்தில் வாங்கிய கடன்களின் பின்விளைவுகளுடன் நாடு சிக்கித் தவிக்கும் போது தவறான ஆலோசனையற்ற நிதிக் கொள்கைகளின் விளைவு தெளிவாகத் தெரிகிறது. நிதி முறைகேட்டுக்கு காரணமானவர்கள் இதனைப் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.