;
Athirady Tamil News

கேரளாவில் வழிபாட்டு தளத்தில் குண்டு வெடிப்பு – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

0

எர்ணாகுளத்தில் வழிபாட்டு தளத்தில் நடத்தப்பட்ட வெடிக்குண்டு தாக்குதலை அடித்து தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

குண்டு வெடிப்பு
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், இன்று காலை 9.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என கேரளா மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேரளா மாநில முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.

எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கேரளா எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாடு தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாடுகாணி, எருமாடு, கனநல்லா உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.