யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழா
வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு தனியார் கத்தோலிக்க பாடசாலையான சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரி முகாமையாளரும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கடந்த வியாழக்கிழமை (26) கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா, கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணருமான செ.ஜெகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது கல்லூரிக் கொடியினை கல்லூரி முகாமையாளரும் யாழ். மறைமாவட்ட ஆயருமான மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஏற்றிவைக்க, பேண்ட் வாத்தியங்கள் இசைக்க விருந்தினர்கள் மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, இறை வணக்கத்தை தொடர்ந்து ஆரம்ப பிரிவு மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது கல்லூரி அதிபர் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டுகளில் (2021 & 2022) கற்றல் செயற்பாடுகளில் மட்டுமன்றி, விளையாட்டு நிகழ்வுகளிலும் ஏனைய இணைப் பாட விதான செயற்பாடுகளிலும் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.