20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ. துஷியந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நேற்று(28.10.2023) இடம்பெற்ற இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
மேலும் அவர் தெரிவிக்கையில், “கடந்த காலங்களை விட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இருநூறு வீதத்திற்கும்மேல் உயர்ந்துள்ளது. உணவு, பானங்களின் விலைகள், எரிபொருள், பாடசாலை பேருந்து கட்டணம், பிள்ளைகளின் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளன.
இவை தற்போதும் அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன. புள்ளி விபரவியல் திணைக்களம் திரட்டிய தகவலின்படி 2023ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்து 2,421 ரூபா குறைந்தபட்ச செலவாக உள்ளது.
வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் குறைந்த பட்சம் அரச ஊழியர்கள் வாழ்வதற்காக 20 ஆயிரம் ரூபாய் நியாயமான சம்பள அதிகரிப்பை வேண்டி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த முக்கிய தீர்மானங்களும் இங்கு நிறைவேற்றப்பட்டன.
இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.லவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்க பொதுச் செயலாளரும், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான ஏ.புஹாது, நிதிச் செயலாளர் க.நடராஜா, தேசிய அமைப்பாளர் எஸ்.துஷியந்தன், உப தலைவர் கே.திருமாறன் உட்பட பெறுமளவான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.