;
Athirady Tamil News

ஆந்திர ரயில் விபத்து: 9 பேர் பலி – தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

0

ஆந்திர மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பலாசா ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.

அதில் விசாகப்பட்டினம் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் ஆந்திர ரயில் விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் இரங்கல்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “ஜூன் 2023 இல் சோகமான பாலசோர் ரெயில் விபத்து நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் ரெயில் மோதிய சம்பவத்தால் ஆழ்ந்த துயரமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரெயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது.

மத்திய அரசும், ரெயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரெயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.