யூத வேட்டை… இஸ்ரேலிய பயணிகளை குறிவைத்து விமான நிலையம் சூழ்ந்த ரஷ்யர்கள்
ரஷ்யாவில் இஸ்ரேலிய பயணிகளை குறிவைத்து விமான நிலையம் ஒன்றை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு
ரஷ்யாவின் Dagestan விமான நிலையத்தில் திடீரென்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டதுடன், இஸ்ரேலிய பயணிகளை தேடியுள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே பாலஸ்தீன ஆதரவு மக்கள் கூட்டம் ஒன்று விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளது.
இதனையடுத்து பயந்துபோன ஊழியர்கள் அலுவலகத்தில் தங்களைப் பூட்டிக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் சம்பவயிடத்தில் பணியில் இருந்த உள்ளூர் பொலிசார் அனைவரையும் பிரிந்து செல்ல வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் ஓடுபாதையில் ஓடி விமானத்தை சுற்றி வளைத்தனர். இந்த நிலையில், தங்கள் குடிமக்கள் மற்றும் அனைத்து யூதர்களையும் பாதுகாக்குமாறு ரஷ்யாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியர்களுக்கு எதிரான வன்முறை
விமான நிலையத்தை முற்றுகையிட்ட மக்களில் பலர் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியிருந்தனர். இதனிடையே, கூட்டத்தில் சிலர் விமான நிலையத்தின் வெளியே, பயணிகளின் ஆவணங்களை சோதனையிட்டதாகவும், அதில் இஸ்ரேலிய பயணிகளை தேடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதற்கு எதிராக ரஷ்யா தீர்க்கமாக செயல்பட வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
Dagestan பகுதியானது இஸ்லாமிய ரஷ்யர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். சுமார் 3.1 மில்லியன் மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.
இதனிடையே, பொது அமைதியை சீர்குலைத்ததாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதியப்படும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.