புறக்கோட்டையில் ஆபத்தான நிலையில் பல கடைகள் : உயிரிழக்கும் நிலையில் ஊழியர்கள்
கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல கட்டடங்களில் தீ பாதுகாப்புக்கான முறையான அமைப்பு இல்லை என கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்தக் கட்டடங்களில் பணியாற்றுவோரின் நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி, புறக்கோட்டை 2வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 22 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
ஆபத்தான நிலையில் கட்டடங்கள்
தீ பரவல் காரணமாக 4வது மாடியில் இருந்த குழுவினர் வெளியே வருவதற்கான கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நெருப்பினால் ஏற்படும் வெப்பம் மற்றும் புகை உள்ளிழுத்தலால் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாகவும் குழுவினரை மீட்க வந்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நான் கட்டிடத்திற்கு வெளியே சென்று கதவு பூட்டை உடைத்துக்கொண்டு நான்காவது மாடிக்குள் நுழைந்தேன். நான்காவது மாடிக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு கதவுதான் இருந்தது.
ஊழியர்களின் நிலை
அவசர காலங்களில் பாதுகாப்பான வெளியேறும் அமைப்பு இல்லை. சில நிமிடங்கள் கடந்திருந்தால், அனைவரும் இறந்திருப்பார்கள்” என அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இது குறித்து கடை ஊழியர்கள் பலர் கூறியதாவது, பல கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இரவு நேரங்களில் கடைகளில் தங்குவதாகவும், கடை உரிமையாளர்கள் தாங்கள் இருக்கும்போதே கதவை பூட்டிவிட்டு சென்று விடுவதாகவும் தெரிவித்தனர்.
நாளை மறுநாள் கடைகள் திறக்கும் வரை தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள், காற்றோட்டம் இல்லாத சிறிய இடத்தில் தங்கி விடுவதாகவும், பலர் கடைக்கு வேலைக்கு வந்துவிட்டு, விடுமுறை நாளில் வீட்டுக்குச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதனால், இங்குள்ள பல தொழிலாளர்களுக்கு அவசர காலத்தில் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது எப்படி என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.