விபத்துக்களில் உயிரிழப்போர் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபையின் புகையிரதங்கள் மற்றும் பஸ்களில் பயணிக்கும் போது விபத்துக்களில் இறக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணை
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 11ஆம் திகதி ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழந்தமை மற்றும் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த இரு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக, இதுபோன்ற சம்பவத்தில் இறந்தவர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. எனினும் கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டது.
அத்துடன், கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் இ.போ.ச பேருந்தில் மரம் ஒன்று விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.