ரணிலுடன் முரண்பாடுகள் தீவிரம் : நாமலின் இல்லத்தில் முக்கிய சந்திப்பு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பாடுகள் தீவிரமடைந்துவரும் நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்றால்போல் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினரின் முக்கியஸ்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ரணிலின் செயற்பாடுகள்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக, தமது கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது தமது கட்சி புறக்கணிக்கப்பட்டதாக பொதுஜன பெரமுனவினர் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், மலலசேகர மாவத்தையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இல்லத்தில் பொதுஜன பெரமுனவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதில் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் வசிக்கும் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறு, தாம் விடுத்த கோரிக்கைகளுக்கு அதிபர் செவிசாய்க்கவில்லை என அவர்களால் இதன்போது முறைப்பாடு செய்யப்பட்டது.
மாறாக, சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட மேலும் ‘சீர்திருத்தங்களை’ செயல்படுத்துவதன் மூலம் ரணில் விக்ரமசிங்க, மக்களுக்கு துயரத்தையே வழங்கி வருகிறார் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவு
மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண உயர்வு மற்றும் தொழில் வல்லுநர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு கட்சியே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சுமத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கணிசமான நிவாரணம் வழங்கவில்லை என்றால், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கக் கூடாது என்று சிலர் கருத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் ஆலோசனைகளை பெற்று செயற்படுமாறு கூட்டத்தில் பங்கேற்ற பொதுஜன பெரமுனவினரிடம், நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.