இஸ்ரேல் – ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை
இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
உலக சந்தையில் பாரிய அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வடைந்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துமென பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் காஸாவில் நடந்துவரும் போர் காரணமாகவே கச்சா எண்ணெய் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை
அவ்வகையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று(30) 90 அமெரிக்க டொலர்களாக பதிலாகியுள்ளது.
WTI CRUDE – 84.08
BRENT CRUDE – 89.10
MURBAN CRUDE – 90.51
என்ற அடிப்படையில் பிரதான மூன்று கச்சா எண்ணெய்களின் விலைகளும் பதிவாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடி
கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் விரைவாக மேற்கொள்ளப்பட உள்ள எரிபொருள் விலை திருத்தத்தில் குறிப்பிடத்தக்களவு பெற்றோல், டீசல் விலைகள் அதிகரிக்கப்படுமென அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, போக்குவரத்து கட்டணங்கள் உயர்வால் கடுமையான நெருக்கடியை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் விலைகள் அதிகரித்தால் பொருட்கள், சேவைகளுக்கான கட்டணமும் அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்தது.
தற்போது ஓரளவு நெருக்கடி குறைந்துள்ள சூழலில் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் மீண்டும் பொருட்களின் விலைகள் உயர்வடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போராட்டங்கள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.