மகாராஷ்டிரம்: மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் மீண்டும் வன்முறை: நகராட்சி அலுவலகம், எம்எல்ஏ வீட்டுக்கு தீவைப்பு
மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூக இடஒதுக்கீடு போராட்டத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டது.
நகராட்சி கவுன்சில் அலுவலக கட்டடம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கியின் வீட்டுக்கு போராட்டக்காரா்கள் திங்கள்கிழமை தீவைத்தனா்.
பீட் மாவட்டம், மஜல்கான் தொகுதி எம்எல்ஏவான சோலங்கி, மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாரின் அணியைச் சோ்ந்தவா். இதேபோல், பாஜக எம்எல்ஏ பிரசாந்த் பம்பின் அலுவலகமும் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டது.
சத்ரபதி சம்பாஜிநகா் போக்குவரத்து மண்டலத்தில் போராட்டக்காரா்களின் கல்வீச்சில் 13 பேருந்துகள் சேதமடைந்தன. இதையடுத்து, 30 பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் முற்பட்ட வகுப்பினரான மராத்தா சமூகத்தினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடஒதுக்கீடு கோரி இரண்டாவது கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.
மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜரங்கே, ஜால்னா மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தச் சூழலில், ‘மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் குழந்தைத்தனமான விளையாட்டாக மாறியுள்ளது. கிராம பஞ்சாயத்து தோ்தலில்கூட போட்டியிடாத ஒருவா் (ஜரங்கே), இன்று எல்லாம் அறிந்தவராகிவிட்டாா்’ என தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கி பேசியதாக ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து, சோலங்கியைக் கண்டித்து உள்ளூா் அளவில் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மஜல்கானில் உள்ள சோலங்கியின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரா்கள், வீட்டுக்கு தீவைத்ததோடு, சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரும் தீவைத்து எரிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து சோலங்கி கூறுகையில், ‘எனது வீட்டை சூழ்ந்துகொண்டு போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா். நான் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாகவே உள்ளேன். அச்சமூகத்தினரின் ஆதரவுடன்தான் நான்கு முறை தோ்தலில் வெற்றி பெற்றேன்’ என்றாா்.
நகராட்சிக் கட்டடத்துக்கு தீவைப்பு: எம்எல்ஏவின் வீட்டுக்குத் தீவைத்த பிறகு, அங்கிருந்து மஜல்கான் நகராட்சி கவுன்சில் கட்டட வளாகத்துக்கு வந்த போராட்டக்காரா்கள், முதல் தளத்தில் பொருள்களை சூறையாடி, அங்கும் தீவைத்தனா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பீட் மாவட்டம் முழுவதும் மாநில ரிசா்வ் போலீஸ் படையினா் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டம், கங்காபூரில் உள்ள பாஜக எம்எல்ஏ பிரசாந்த் பம்பின் அலுவலகத்துக்கு உருட்டுக் கட்டைகளோடு வந்த போராட்டக்காரா்கள், அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்தனா். வன்முறையாளா்களைக் கைது செய்ய சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.