பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் குறித்து விசேட தீர்மானம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகமைப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு டிப்போ அத்தியட்சகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சபையின் விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
முறையான பயிற்சி, அனுபவமுள்ள சாரதிகள் மற்றும் உதவி சாரதிகளை சேவையில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை
இதன்படி மாணவர்களின் பாதுகாப்பிற்காக சாரதிகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் சில இளம் சாரதிகள் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்துவதை அவதானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘மாணவர் சுற்றுலா’ செல்லும் பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் ஓட்டுதலின் போது கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.