;
Athirady Tamil News

இலங்கையை தொடர்ந்து இந்தியாவுக்கு தாய்லாந்து கொடுத்த தீபாவளிப் பரிசு!

0

இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அறிவித்த நிலையில் , இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் இரண்டாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.

தாய்லாந்து சுற்றுலாத்துறை அந்நாட்டுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியர்கள் விசா பெறாமலே தாய்லாந்திற்குச் செல்லலாம் என்பதுடன் 30 நாட்கள் வரை அங்கே தங்கலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்கு தள்ளுபடி
நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை இந்த விசா சலுகை நடைமுறையில் இருக்கும். வெளிநாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முயற்சியாக, இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கான விசா தேவையை தாய்லாந்து தள்ளுபடி செய்துள்ளது.

அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் இரண்டாவது நாடு தாய்லாந்து. முன்னதாக, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மார்ச் 31, 2024 வரை விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை சமீபத்தில் அறிவித்தது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியப் பயணிகள் பல நாடுகளின் சுற்றுலாத்துறைகளின் சலுகைகளால் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள்.

வெளிநாடுகளுக்குச்ச சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2011-ல் 1.4 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 2019-ல் 2.7 கோடியாக உயர்ந்தது. பின்னர், இரண்டு ஆண்டுகள் கோரோனா தொற்று பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அந்தக் கட்டத்தைக் கடந்து 2022-ல் வெளிநாடுக்குச் சுற்றுலா சென்ற இந்தியர்கள் எண்ணிக்கை 2.1 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் இந்தியர்களை அதிகமாகக் கவரும் டாப் 10 நாடுகளில் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஐக்கிய அரபு அமீரகம், (கிட்டத்தட்ட 59 லட்சம் அல்லது 28%);

சவுதி அரேபியா (24 லட்சம் / 11.5%)

அமெரிக்கா (17 லட்சம் / 8%)

சிங்கப்பூர் (9.9 லட்சம் / 4.7%)

தாய்லாந்து (9.3 லட்சம் / 4.4%)

பிரிட்டன் (9.2 லட்சம் / 4.3%)

கத்தார் (8.7 லட்சம் / 4.1%)

குவைத் (8.3 லட்சம் / 3.9%)

கனடா (7.7 லட்சம் / 3.6%)

ஓமன் (7.2 லட்சம் / 3.4%) ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.