;
Athirady Tamil News

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்த 2ஆவது உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல்

0

இலங்கையில் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (31) கொழும்பில் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ( JISA), ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் தனியார் துறை மேம்பாட்டு பங்காளிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2022 டிசம்பரில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல், பொருளாதார மற்றும் கட்டமைப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கத்துடன் கூட்டப்பட்டது.

பசுமை அபிவிருத்தி
நெருக்கடி நிலையிலிருந்து நிலையான வளர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்தல், முதலீடுகளை ஈர்த்தல், தனியார் மூலதனத்தை ஈடுபடுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அரசாங்கமும் இதில் பங்கேற்கேற்கும் தரப்பினரும் இலங்கைக்கு தாக்குப்பிடிக்கக் கூடியதும் அனைத்தையும் உள்ளடக்கியதுமான பசுமை அபிவிருத்திக்குத் தேவையான அர்ப்பணிப்பைப் பேணுதல் என்பன குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தினர்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதானால் பல் தரப்பு நிதி நிறுவனங்களின் உதவியுடன் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் அவசியம் என 2022 டிசம்பரில் நடைபெற்ற முந்தைய அமர்வில், உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் முடிவு செய்தனர்.

இதுவரை, இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டியுள்ளதுடன், பணவீக்கத்தைக் குறைத்தல், அந்நியச் செலாவணி பணப்புழக்க அழுத்தங்களைத் தளர்த்துதல் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத் திட்டத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கடன் மறுசீரமைப்பு
இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி (EFF) உதவியுடனும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளின் ஆதரவுடன், அடிப்படை சட்டங்கள் இயற்றப்பட்டு, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், சர்வதேச நிதிச் சந்தைக்குள் மீண்டும் பிரவேசிக்கவும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இருப்பினும், வரையறுக்கப்பட்ட நிதி மூலங்கள் மற்றும் வெளிப்புற இடையூறுகள் காரணமாக, இந்த மீட்சிக்கான பாதை இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை.

முன்னோக்கிச் செல்கையில் நிரந்த அபிவிருத்திப் பாதையொன்றை மீளப் பெறுவதற்காக, விரைவான மற்றும் போதுமான ஆழமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நுண் பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துதல் ஆகியவை நிலையான வளர்ச்சிப் பாதையை மீண்டும் பெறுவதற்கு அவசியம்.

அபிவிருத்திப் பங்காளிகள் உட்பட தொடர்புடைய பங்குதாரர்களை உள்ளடக்கி இந்த சீர்திருத்தங்களை ஒருங்கிணைக்க தெளிவான மற்றும் சுருக்கமான செயல்திட்டம் இருப்பது, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

மீட்சியில் இருந்து நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும் இலங்கைக்கான வளர்ச்சியின் மூலோபாய திசைகள் குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க இங்கு கருத்துத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.