மரநடுகை மாத பிரகடனம் தொடர்பில் சி.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை
வட மாகாண மரநடுகை மாதமாக நவம்பர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் செயற்பாட்டை இவ்வருடமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன ஆகியோருக்கு வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் நேற்று (31.10.2023) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரநடுகை பிரகடனம்
அந்த கடிதத்தில், வடக்கு மாகாண மரநடுகை மாதமாக நவம்பர் பிரகடனம் தீர்மான இலக்கம் R16/2014/138 வடக்கு மாகாண சபையின் ( 25.09.2014 ) ஆந் திகதிய 16வது அமர்வில் ஆண்டுதோறும் வரும் நவம்பர் மாதத்தை மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்துவதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதற்கமைய வடக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் இச்செயற்பாட்டை இவ்வருடமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.