லண்டனில் இந்திய வம்சாவளி நபர் பொலிசாரிடம் சொன்ன தகவல்… ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
லண்டனில் பேஸ்பால் மட்டையால் மனைவியை தாக்கி கொலை செய்ததாக கூறி பொலிசாரிடம் சரணடைந்த இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியை தாக்கி கொலை
கிழக்கு லண்டனில் வசித்து வந்த 79 வயது தர்சமே சிங் என்பவரே, கடந்த மே மாதம் 2ம் திகதி Romford காவல் நிலையம் சென்று பொலிசாரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
பேஸ்பால் மட்டையால் தமது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாகவும் தர்சமே சிங் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பொலிசார், உடனடியாக சம்பவம் நடந்த குடியிருப்புக்கு விரைந்துள்ளனர்.
அங்கே, 77 வயது மாயா சிங் என்பவரின் சடலத்தை மீட்டுள்ளனர். மட்டுமின்றி, தாக்குதலுக்கு பயன்படுத்திய பேஸ்பால் மட்டையும் பொலிசார் கைப்பற்றினர். அத்துடன் தாக்குதல் நடந்த இடத்தில் காணப்பட்ட ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர்.
மாயா சிங் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ள அதிகாரிகள், உடற்கூறு ஆய்வில், தலையில் பலமாக தாக்கப்பட்டதாலையே மரணம் ஏற்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அடுத்த நாளே, தர்சமே சிங் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில், நவம்பர் 1ம் திகதி இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, தர்சமே சிங் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.
கொலை செய்ய தூண்டிய சம்பவம்
அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தர்சமே மற்றும் மாயா தேவி சிங் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் என்றே கூறப்படுகிறது. இது ஒரு துயரமான சம்பவம் என குறிப்பிட்டுள்ள, விசாரணை அதிகாரி ஒருவர்,
இப்படியான சூழலில் யாரும் தங்கள் தாயாரை இழந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர், அந்த குடும்பத்தினருக்கு இந்த கடினமான நேரத்தில் உதவ தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமது மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய தூண்டிய சம்பவம் குறித்து தர்சமே சிங் இதுவரை வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,
இருப்பினும் அவர் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது எனவும், தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.